மறுபடியும் #சுஜாதா அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்களை முன்னர் ஒருமுறை கொடுத்திருந்தேன். அதன் அடுத்த தொகுப்பைப் படித்துப் பார்த்தபோது இன்னும் சில கேள்வி பதில்களை ரசிக்க முடிந்தது. அவையும் உங்கள் பார்வைக்காக... சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? -எம்.பரிமளா, சென்னை. கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’. திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?
-ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர். இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும். ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. [.....]