மூன்று சூரியன்கள் தோன்றிய அதிசயம்!!

Compiled by London swaminathan
Article No.1857; Dated 11 May 2015.
Uploaded in London at 9-35
சமீபத்தில் மங்கோலியாவில் மூன்று சூரியன்கள் தோன்றியது சென்னை முதல் லண்டன் வரை எல்லா பத்திரிக்கைகளிலும் ஜனவரி (2015) மாதத்தில் வந்தன. இது ஒரு அதிசய நிகழ்வே. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் காரைக்காலில் இப்படி மூன்று சூரியன்கள் தோன்றியது தினமணியில் செய்தியாக வந்தது. இதைவிட வியப்பான விஷயம் வராஹமிகிரர் என்பவர் சம்ஸ்கிருத கலைக் களஞ்சியமான பிருஹத் சம்ஹிதாவில் 1500 ஆண்டுகளுக்கு முன் இது பற்றி எழுதி வைத்ததாகும்!! அதற்கு முன் அரிஸ்டாடில் போன்ற கிரேக்க அறிஞர்கள் இது பற்றிப் பேசியிருந்தாலும் வராஹ மிகிரரே முதலில் இதைச் சொல்லி இருக்க வேண்டும். ஏனெனில் அவர், தனக்கு முந்திய 20-க்கும் மேலான அறிஞர்கள் பெயர்களைச் சொல்லி அவர்கள் சொன்ன விஷயங்களைச் “சுருக்கமாகச்” சொல்வதாக எழுதியுள்ளார்.
மூன்று சூரியன்கள் தோன்றுவது எப்படி என்பதைக் காண்பதற்கு முன்னால், இது பற்றி வராஹமிகிரர் சம்ஸிருதத்தில் எழுதியது என்ன என்பதைக் காண்போம்
பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 37 (ப்ரதி சூர்ய லக்ஷணம்)
1).போலி சூரியன்கள் தோன்றுவது நல்ல சகுனமே! அந்தந்த பருவத்துக்கு ஏற்ற வண்ணத்தில் தோன்றினால் நல்லது. மேலும் தூய வெண்மை அலது வைடூர்ய ரத்ன வர்ணத்தில் இருந்தால் நல்லது.
ப்ரதிசூர்யக: ப்ரசஸ்தோ திவசக்ருத்ருதுவர்ணசப்ரப: ஸ்நிக்த:
வைடூர்ய நிப: ஸ்வச்ச: சுக்லஸ்ச க்ஷேமசௌர்பிக்ஷ:
2).போலி சூரியன்கள் மஞ்சள் வர்ணத்தில் இருந்தால் வியாதிகள் மலியும்; சிவப்பு வர்ணத்தில் இருந்தால் ஆயுதப் போராட்டம் நிகழும். பல சூரியன்கள் வரிசையாகத் தோன்றுமானால் வியாதிகள், அரசர் படுகொலை, கொள்ளைக்காரர் தொல்லைகள் நிகழும்
பீதோ வ்யாதீம் ஜனயத்யசோகரூபஸ்ச சஸ்த்ரகோபாய
ப்ரதிசூர்யாணாம் மாலா தச்யுபயாதங்கன்ருப ஹந்த்ரீ
3).உண்மைச் சூரியனுக்கு வடக்கில் போலி சூரியன் தோன்றினால் மழையும் தெற்கில் இருந்தால் கடுங் காற்றும் தோன்றும். மேலே தோன்றினால் மன்னனுக்கு கேடு, கீழே தோன்றினால் மக்களுக்குக் கேடு. இரு பக்கங்களிலும் தோன்றினாலோ நீர் நிலைகளால் (ஆற்று வெள்ளம், கடல் சுனாமி அலை) கேடு வரும்.
திவஸக்ருத: ப்ரதிசூர்யோ ஜலக்ருதுதக்தக்ஷிணோ ஸ்திதோ அனிலக்ருத்
உபயஸ்த: சலிலபயம் ன்ருபமுபரி நிஹன்யத்யதோ ஜனஹா
இதற்கு மேல் அவர் காஸ்யபர், பராசரர் முதலியோர் இது பற்றி என்ன சொன்னார்கள் என்ற ஸ்லோகங்களையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.
ஹிந்துக்கள் வான மண்டலத்தைக் கூர்ந்து கவனித்ததோடு நில்லாமல் அதை எழுதியும் வைத்தது அவர்களது விஞ்ஞான கண்ணோட்டத்துக்கு சான்றாகத் திகழ்கிறது.அவர் எழுதியது இன்றைய அறிவியல் அளவுக்கு இல்லாவிட்டாலும் அன்றே நாம் இதைக் கண்டு பிடித்து எழுதினோம் என்பது பெருமைக்குரியது. வானவியல் உண்மைகள் மாறிக்கொண்டே வருகின்றன. 25 ஆண்டுக்கு முந்தைய வானவியல் புத்தகங்கள் இங்கு லண்டனில் பழைய புத்தகக் கடைகளில்தான் பார்க்கலாம். 2000 ஆண்டுகளுக்கு முன் இந்துக்கள் இதை சம்ஸ்கிருதத்தில் எழுதியதற்கு அவர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போட வேண்டும். மேலும் வராஹமிகிரர் பூகம்பம் பற்றியும் ஒரு தனி அத்தியாயம் எழுதுயுள்ளார். இவ்வாறு இன்றைய உலகை உலுக்கும் விஷயங்கள் பற்றி அன்றே தனித்தனி அத்தியாயங்கள் எழுதியது அதிசயமன்றோ!!! சம்ஸ்கிருதத்தைக் கற்றால் இது போன்ற பல்லாயிரக் கணக்கான உண்மைகளை உணரலாம்.
32496-sun-dogs02
மூன்று சூரியன்களுக்கு விஞ்ஞான விளக்கம்
இது மிக உயரத்தில் உள்ள மேகங்களில் இருக்கும் அறுகோண வடிவ பனிக்கட்டி ஸ்படிகங்களால் (ஹெக்சகனல் கிறிஸ்டல்ஸ்) தோன்றுகின்றன. பிரிஸம் எனப்படும் முக்கோண வடிவ கண்ணாடியின் வழியே ஒளி செல்லும் போது அது வானவில் நிறத்தில் ஏழாகப் பிரிகிறது. அது போலவே அறுகோண வடிவ ஸ்படிகம் வழியே செல்லுகையில் அது சரியாக 22 டிகிரி கோணதில் பிரிகிறது. இதை ஒலி விலகல் என்பர். இந்த அறுகோண ஐஸ் ஸ்படிகங்கள் மேகத்தில் பல இடங்களில் பரவலாகக் காணப்பட்டால் சூரியனைச் சுற்றி ஒரு வட்டம் தோன்றும். இதைத் தமிழில் சூரியனைச் சுற்றி கோட்டை கட்டி இருக்கிறது என்பர்.
இதற்கு மாறாக அந்த ஐஸ் ஸ்படிகங்கள் கீழே போய் செங்குத்துக் (வெர்டிகல்) கோடுகளாக நிற்குமானால், விலகும் ஒலியானது படுக்கை (ஹரிஸாண்டல்) வடிவத்தில் இருக்கும் அவை போலி சூரியன்களைத் தோற்றுவிக்கும்.
போலி சூரியன்கள் பல வண்ணங்களில் – ஆரஞ்சு, மஞ்சள், நீலம்—இருக்க முடியும். சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் சிவப்பாகவும், தள்ளிப் போக போக மஞ்சள், ஆரஞ்சு, நீலம் என்று மாறிக்கொண்டேயும் வரும்.
கிரேக்க அறிஞர் அரிஸ்டாடில் கி.மு.384, மீண்டும் கி.மு.322ல் தோன்றிய போலி சூரியன்களைக் குறித்துவைத்தார். அவருக்குபின் வந்தோர் இது பற்றி எழுதிவிட்டு இதனால் வரும் கேடுகள் என்ன என்ற நம்பிக்கைகளையும் எழுதினர்.
சம்ஸ்கிருத நூல்களில் மேலும் பல இடங்களிலும் போலி சூரியன்கள் பற்றிய குறிப்புகள் உள.
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment